GM LEGAL RANKED BY LEGAL 500 AS A TOP TIER FIRM IN CHENNAI CITY FOCUS

GM LEGAL RANKED BY LEGAL 500 AS A TOP TIER FIRM IN CHENNAI CITY FOCUS

அரசமைப்பு முறை மீறும் ஆளுநர் 

ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்ற ஏழு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், டிசம்பர் 2015 இல் தாக்கல் செய்த கருணை மனுவின் மீது தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித்  தொடர்ந்து முடிவேதும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஆளுநரின் காலதாமதத்தை எதிர்த்த பேராணை மனுவில், 6 செப்டம்பர் 2018 இல், ஆளுநர் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து ஏழு கைதிகளையும் விடுவிப்பதற்கு ஆதரவாக தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானம் 09 செப்டம்பர் 2018 இல் நிறைவேற்றியது. அது ஆளுநரை முரண்பட முடியாதபடி செய்தது. இன்று ஆளுநரின் தொடர்ந்த செயலற்ற தன்மையால் அரசின் நிர்வாகத்திற்குள் அரசியலமைப்பு ரீதியான விரிசல்களுக்கு வழிவகுத்துள்ளது. இப்படி முட்டுக்கட்டை தொடர்வது நீதித்துறையின் தலையீட்டிற்கு வழிவகுக்கும்.

மரு ராம் எ. இந்திய ஒன்றியம் (1981) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “அரசியலமைப்பின் 72 மற்றும் 161 வது பிரிவுகளின் கீழ் மன்னிக்கும் அதிகாரத்தை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பயன்படுத்த முடியும், குடியரசுத்தலைவரோ ஆளுநரோ தனது தனிப்பட்ட விருப்பத்தால் முடியாது” என்று தீர்ப்பளித்துள்ளது. அந்த வழக்கில் நீதிபதி வி கிருஷ்ணய்யர்  “அரசாங்கத்தின் ஆலோசனை ஆளுநரை கட்டுப்படுத்தும்” என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எனவே, ஒரு ஆளுநர் தன்னிடம் வழங்கப்பட்ட தீர்மானத்தை அரசியலமைப்பிற்கு உட்பட்டதா என சோதிக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

சத்ருகன் சவுகான் எ. இந்திய ஒன்றியம் (2014) என்ற வழக்கில் கருணை மனுக்கள் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அரசியலமைப்பு அதிகாரிகளான குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர் செய்யும் மிகுதியான தாமதத்தை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஆய்வு செய்தது. அதில் “அத்தகைய தாமதத்தின் மனிதாபிமானமற்ற விளைவாக அனுமானித்தல்” என்ற கொள்கையை உச்சநீதிமன்றம் வகுத்தது. சிறைவாசம் அனுபவித்தலும் மனுதாரர்களுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள 21 வது பிரிவின் அடிப்படை உரிமை பொருந்தும் என்றும் அது ஒருவரின் “இறுதி மூச்சு வரை” உள்ள உரிமை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநரின் மிகுதியான தாமதம் அதன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, அரசியலமைப்பின் 32 வது பிரிவின் அதிகாரங்களை பயன்படுத்தி 15 குற்றவாளிகளின் மரண தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

நீண்ட காலமாக ஆளுநர்களும், சட்டப் பேரவை தலைவரை போலவே, தங்களது செயல்களுக்கு தாங்கள் பதிலளிக்க தேவையற்றவர்கள் என்று கருதினர்.  கெய்ஷாம் மேகாசந்திர சிங் எ. மாண்புமிகு பேரவைத் தலைவர் (2020) என்ற சமீபத்திய வழக்கில், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தகுதிநீக்க நடவடிக்கைகள் தொடர்பாக பேரவைத் தலைவரின் செயலற்ற தன்மைக்கு எதிராக கட்டளை பேராணையின் வழங்கியது. நான்கு வார காலத்திற்குள் தகுதிநீக்க மனுக்களை முடிவு செய்ய பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ராஜேந்திர சிங் ராணா எ. சுவாமி பிரசாத் மவுரியா (2007) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம்  தனது முந்தைய தீர்ப்பை நினைவு கூர்ந்தது, “தகுதிநீக்கம் கோரும்  மனுவை பேரவைத் தலைவர் தீர்மானிக்கத் தவறியது வெறுமனே நடைமுறை தவறு என்று கூற முடியாது” மற்றும் அது “பத்தாவது அட்டவணையால் பரிசீலிக்கப்பட்ட அரசியலமைப்புத் திட்டத்திற்கு எதிரானது” என்று தீர்ப்பளித்தது. அரசியலமைப்பு அதிகாரியின் செயலற்ற தன்மை அரசியலமைப்பு ரீதியாக முறையற்றது மற்றும் அதிகார வரம்பின் பிழை என்றும் கருதப்படுகிறது. 

தற்போதைய வழக்கில், ஆளுநரால் கணிசமான மற்றும் விவரிக்க முடியாத தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின்  பதினைந்தாவது சட்டமன்றத்தின் பதவிக்காலம் மற்றும் அதன் விளைவாக, அமைச்சரவையும் 2021 மே மாதத்தில் முடிவுக்கு வரும் என்று அனைவரும் அறிவர். எனவே, ஆளுநரின் செயலற்ற தன்மை உச்சநீதிமன்றத்தின் உடனடி தலையீட்டை அழைக்கும் ஒரு வழக்கை உருவாக்கியுள்ளது இல்லையெனில் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானமும் அரசியலமைப்பின் 161 வது பிரிவில் உள்ள சொற்களும் அர்த்தமற்றதாக மாறிவிடும். 

மனுராஜ் சுண்முகசுந்தரம் 

வழக்கறிஞர் மற்றும் தி.மு.க. செய்தித் தொடர்பாளர்.

Published in Murasoli Newspaper

Leave a Comment