இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாகத் திகழ்கிறது. இதுவரை செய்தித்தாள்களின் தலையங்கத்திலும், சர்வேதச தன்னார்வா தொண்டு நிறுவனங்களின் விவாத மேடைகளிலும் மட்டுமே அடைபட்டுக்கிடந்த மரண தண்டனை எதிர்ப்புக் குரல்கள் தற்போது அரசியல் தளத்தில் அடி எடுத்து வைத்திருக்கின்றன. மூன்று வெவ்வேறு கூட்டணிகளில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றிருப்பதன் மூலம் மரண தண்டனையை சட்டரீதியாக ஒழிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
சமீப காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் மரண தண்டனைக்கு எதிராக வாதங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தின் தேவேந்திர புல்லர் வழக்கில் சிரோமனி அகாலி தளமும், கஷ்மீரின் அப்சல் குரு வழக்கில் தேசிய மாநாட்டு கட்சியும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். இதுபோல், வழக்குகளின் அடிப்படையில் தற்காலிகமாக எழும் ஆதரவுகளுக்கு கொள்கை ரீதியான பின்புலம் இல்லை. மேலும், இதுபோன்ற குரல்கள் நிரந்தர தீர்வுக்கு வழிவகையும் செய்வதில்லை.
அரசியலமைப்பு சட்ட விதி-21ம் மரணதண்டனையும்
அரசியல் தரப்பினரை மட்டும் இதில் குறிப்பிட்டு கூற இயலாது, ஏனென்றால் ஆயுள் தண்டனை கொடுக்க அறவே இயலாது என்ற அடிப்படையில் ‘மிகவும் அரிதான’ குற்றங்களில் உச்ச நீதிமன்றமும் மரண தண்டனைக்கு ஆதரவாக இருந்து வருகிறது. ‘மிகவும் அரிதான’ (rarest of the rare) குற்றங்கள் என்ற கூற்றை 1980ல் பச்சன் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியது. அன்று முதல் கீழ் நீதிமன்றங்கள் ‘மிகவும் அரிதான’ என்ற கூற்றின் அடிப்படையில் மரண தண்டனை விதித்து வருகின்றன. உரிமை சார்ந்த சட்ட இயலின் பரிணாம வளர்ச்சியில், குறிப்பாக 1978ல் மேனகா காந்தி வழக்கில் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு பிறகு பச்சன் சிங் வழக்கில் அரசியலமைப்பு சட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லாத கூற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் கூறியிருக்கிறார்.
மிகவும் சமீபமாக, சத்ருகன் சவுகான் (2014) வழக்கில் அரசியலமைப்பு சட்ட விதி-21 அளிக்கும் பாதுகாப்பு தூக்கு கைதிக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதனையடுத்து, முருகன் (ராஜீவ் காந்தி கொலை) வழக்கில், உச்சநீதிமன்றம் சத்ருகன் சவுகான் தீர்ப்பில் கொடுத்த காரணத்தின் அடிப்படையில், மரண தண்டனையை குறைத்திருக்கிறது. இந்த இரு வழக்குகளிலும், கருணை மனுவை காலதாமதப்படுத்துவது அடிப்படை உரிமையை பாதிக்கவே செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து மரண தண்டனை அடிப்படை உரிமையை பாதிக்கிறதா என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த சரியான காரணியாகும். இந்த தொடர் தீர்ப்புகள் மூலம் அரசியல் தளத்தில் மரண தண்டனையை ஒழிப்பதற்கு உச்சநீதிமன்றம் ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கை விதை விதைக்கிறது.
மரண தண்டனைக்கு எதிரான அரசியல்
பொதுமக்களிடையே மரண தண்டனை ஒழிப்பு தொடர்பாக விவாதம் தொடங்குமேயானால் அரசியல் தலைமைகள் செயல்பட ஏதுவாக இருக்கும். இங்கே, தமிழ்நாடு ஒரு சுவாரஸ்யமான நேர் ஆய்வை நமக்கு தருகிறது. தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தின் தொடக்கம் எங்கே என்று பார்த்தால் அது ராஜீவ் காந்தி கொலை வழக்குதான். கடந்த இருபது ஆண்டுகளில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததுபோது, சமூகத்தின் மனசாட்சி அவர்கள் மீது இரக்கம் காட்டத்தொடங்கி பின்னர் மரண தண்டனைக்கு எதிராக ஒரு வெறுப்பு உணர்வாக உருவெடுத்திருக்கிறது. தவிர நாம் அனைவருக்கும் பரிட்சயமான, தில்லி மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியது இதர அரசியல் கட்சிகளின் கருத்துகளில் இருந்து வேறுபட்ட வலுவான முன்னெடுப்பாகும். மேலும், மரண தண்டனை குற்றங்கள் நடப்பதை தடுக்குகிறதா என்ற கேள்வியை இடதுசாரி தலைவர்கள் முன்வைத்திருக்கின்றனர்.
மேலே குறிப்பிட்ட மூன்று கட்சிகளில் ஏதாவது ஒன்று அடுத்த மத்திய அரசில் அங்கம் வகித்தால் மரண தண்டனையை ஒழிக்க என்னென்ன சாத்தியக் கூறுகள் உள்ளது என்பதை பார்க்கலாம். முதலில், வரப்போகும் புதிய அரசு சட்ட இயலின் பரிணாம வளர்ச்சியையும், தற்போது உலகில் நிலவும் சூழ்நிலையையும் கருத்தில்கொண்டு நமது சட்டத்தில் மரண தண்டனையின் தேவையை மறுஆய்வு செய்ய தேசிய சட்ட ஆணையத்துக்கு பரிந்துரை செய்யவேண்டும். சமீபத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளின் அடிப்படையில், சட்ட ஆணையம் மரண தண்டனையை ரத்து செய்யவும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களையும் பகுப்பாய்வு செய்யவேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டத்தில் தேச துரோகம் (பகுதி 121), கொலை (பகுதி 302), தொடர் பாலியல் வன்முறை (பகுதி 376E) அத்துடன் ஆயுதப்படைகள் சட்டம், ஆயுத சட்டம், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், போதை மருந்துகள் தடுப்பு சட்டம் போன்ற பதினோரு சட்டங்களில் நாடாளுமன்ற ம் திருத்தம் கொண்டுவரவேண்டும். மேலும், ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமனம் செய்து இந்த திருத்தங்களினால் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்களை ஆய்வு செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட வழிவகை செய்யவேண்டும்.
இறுதியாக, உலகில் 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்ட நிலையில், இந்தியா மட்டும் எஞ்சிய நாடுகளுடன் மரன தண்டனையை கைவிடாமல் இருக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய இயக்கங்களை எதிர்க்கும் பழமையான எதிர்ப்புணர்வை இந்தியா கைவிட்டு, ஐக்கிய நாடுகளின் பொது அவையில் மரண தண்டனைக்கு எதிராக தடை விதிக்கும் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும். அதனைத்தொடர்ந்து, அடுத்து வரப்போகும் அரசு உரிய சட்டத்திருத்தத்தை ஆராய்ந்து, விவாதித்து இயற்றுவதற்கு முன் மரண தண்டனையை செயல்படுத்த தடைவிதிக்கவேண்டும்.
இந்த முன்னெடுப்புகள் மூலம், மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்ற மூன்று கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு நிச்சயம் புதிய வழி பிறக்கும்.
மனுராஜ் சண்முகசுந்தரம்.
(தில்லி பல்கலைக்கழக சட்ட மாணவர் மற்றும் நாடாளுமன்ற ஆய்வாளர்)
Link to the Article: http://viduthalai.in/e-paper/80319.html
Leave a Comment